தியானத்திற்கு நாம் எடுத்துக் கொள்ளுகிற வேதவசனம் எரேமியா – 48 ம் அதிகாரம் 10-12 வசனங்கள்.
எரே-48-10 – ”கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். இரத்தம் சிந்தாதபடிக்கு தன் பட்டயததை அடக்கிக் கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்”.
இரத்தம் சிந்தாதபடிக்கு தன் பட்டயத்தை அடக்கிக் கொள்ளுவது போல தேவவசனங்களை நன்கு அறிந்திருந்தும், அதை சுவிசேஷமாக அறிவியாமல், தன்னை அடக்கிக் கொள்ளுகிறவனும், தேவ ஊழியத்தை அசட்டையாய் செய்கிறவனும் சபிக்கப்பட்டவன் என்று இந்த வசனத்தில் வேதம் நம்மை எச்சரிக்கிறது.
இதைக் குறித்து, தேவன் மோவாப் ஜனங்களிடம் காணப்படுகிற காரியங்களை உவமானமாகக் கூறி நம்மை எச்சரிக்கிறார். கர்த்தருக்கு அருவருப்பான சந்ததியாகிய மோவாபிடமே இந்தக் காரியங்களைக் கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்றால், நம்மிடம் இன்னும் எத்தனை அதிகமாக எதிர்பார்ப்பார் என்பதை நாம் சிந்தித்து செயல்படும்படி எரே-48-11 ம் வசனத்தை காண்பித்துக் கொடுக்கிறார்.
மோவாப் தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்தது.
அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும்,
அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது.
அது சிறையிறுப்புக்குப் போனதில்லை.
ஆதலால், அதின் ருசி அதில் நிலைத்திருந்தது.
அதின் வாசனை வேறுபடவில்லை.
இங்கு மோவாப் என்ற இடத்தில் நம்முடைய பெயரை எழுதிக் கொள்ளலாம். தேவனை ஏற்றுக் கொண்ட தேவபிள்ளை, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், எப்படிப்பட்ட மாற்றங்களைக்கொண்டிருக்க வேண்டும் என்பதை திடசாட்சியாக நமக்கு உணர்த்துகிறதாக இந்த வசனம் காணப்படுகிறது. நாம் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு கடந்து வந்திருக்கிறோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு கடந்து வராமல் இருக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்க நாம் கடமைப் பட்டவர்களாக இருக்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள 6 காரியங்களையும் ஒவ்வொன்றாக தியானிப்போம்.
1) மோவாப் தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்தது:
பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே கீழே மேலே விழுந்து அடிபட்டு, உடைபட்டு, காயம்பட்டு, சுட்டுக்கொள்ளப்பட்டு
(நெருப்பு), ஆசைப்பட்டு, விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, பல முயற்சிகளின் நடுவில் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, திட்டப்பட்டு, துக்கப்பட்டு, வையப்பட்டு, உணரப்பட்டு, உதைப்பட்டு, தள்ளப்பட்டு, தூக்கியெறியப்பட்டு, இப்படிப்பட்ட பல அனுபவங்களுக்குள் கடந்து போனால் தான், பெற்றோரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துணர்ந்து, ஞானமாக செயல்பட முடியும்.அதுபோல, சிறுவயதிலிருந்தே தேவவசனத்தோடு இணைந்து பிள்ளைகளை வளர்த்தால் தான், தன்னைக் குறித்து யோவேல்-2-28 ல் சொல்லப் பட்டுள்ளபடி ”மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள் என்ற வேதவசனத்தின்படியுள்ள தேவ திட்டத்தை பிள்ளைகள் உணர்ந்து செயல்பட முடியும்.
பெற்றோரும் பிள்ளைகளை வேதவசனத்தின்படி வருகைக்கு ஆயத்தப் படுத்தும்படி வளர்க்க வேண்டும். பிள்ளைகள் தண்டனைக்கு தப்பிக் கொள்ள வேண்டுமானால், பரீட்சைக்கு நிற்பவர்களாகவும், அதில் ஜெயமெடுக்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமானால், பிள்ளைகளிடம் மாற்றங்கள் காணப்பட வேண்டும். நம் பிள்ளைகளை சுகமாய் வைத்திருக்கிறோம், சுகமாய் வளர்க்கிறோம் என்று சொன்னால் பிள்ளைகளுக்கு சம்பத்தையல்ல, துன்பத்தையே சேர்த்து வைத்திருக்கிறோம் என்று அர்த்தம்.
ஜெபம்:-
மோவாப் தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது போல, சுகமாய் வாழ்வதினால், கர்த்தருக்கேற்ற மாற்றங்கள் எங்களிடமும், எங்கள் பிள்ளைகளிடமும், காணப்படாமலிருக்கிறதை ஒப்புக் கொள்ளுகிறோம் ஆண்டவரே. எல்லாவற்றிலும் சுகமாய் தான் இருக்க வேண்டும் என்றும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளாமலிருந்ததையும் மன்னியும் ஆண்டவரே. கர்த்தருக்காக பாடுகளை அனுபவிக்கும் மனப்பக்குவம் எங்களிடம் காணப்பட ஒப்புக்கொடுக்கிறோம் ஆண்டவரே.கார்த்தாவே, நீர் எங்களை எப்படி நடத்த சித்தமாக இருக்கிறீரோ, அதற்கு இடங் கொடுத்து, துன்ப வேளைகளில், தேவரீர் இதிலிருந்து எங்களை தூக்கி எடுக்க வல்லமையுள்ளவராக இருக்கிறீர் என்ற விசுவாசத்தோடு, உம்மையே நாங்கள் சார்ந்து கொள்ளுகிறோம் ஆண்டவரே. தேவ செய்கை எங்களில் காணப்பட இடங் கொடுக்கிறோம். தேவரீர் எங்களுக்குள் மாற்றம் உண்டாகும்படி எங்களுக்கு கிருபையாயிருப்பீராக என்று ஜெபிக்கிறோம். நன்றி தேவனே.
2) அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில்வார்க்கப்படாமலும்:
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வளர்சிதை மாற்றம் உண்டாக வேண்டும். தேவன் படைத்த ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக்கெடு உள்ளது.
உதாரணமாக கழுகுகள் குறிப்பிட்ட வயதில் சிறகுகள் பாரமாக மாறிவிட்ட சூழ்நிலையில், தனித்திருந்து, தன் சிறகுகளை தானே பிய்த்துக் கொண்டு கன்மலையின் இடுக்குகளில் அன்ன ஆகாரமின்றி ஒளித்திருந்து காத்திருக்கும் போது, புதிய சிறகுகள் முளைத்தபின்பு, தான் இளமைக்கு திரும்பியது போல முன்பைக் காட்டிலும், தன் சிறகுகளை அடித்து உயர உயர எழும்பி காற்றை எதிர்த்துக் கொண்டு பறந்து செல்லும்.
அதுபோல மனிதனுடைய உடம்பிலுள்ள பற்கள், முடிகள் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் விழுந்து புதியவை முளைக்கும், மனிதனுடைய உடம்பிலுள்ள செல்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செத்து புதிய செல்கள் உருவாகும். இவைகளெல்லாம் மனிதனுடைய நன்மைக்காக தேவன் அனுமதித்துள்ள வளர்சிதை மாற்றங்கள்.
அதுபோல தான் இரட்சிப்படைந்த மனிதனுடைய உள்ளமும் செயல்பட வேண்டும். கிறிஸ்துவுக்குள் பிறந்து விட்டால் பழையன கழிந்து புதியன புகுதல் என்ற கோட்பாடு உண்டாக வேண்டும். பழைய பாரம்பரிய பாத்திரத்திலேயே இருந்தால் கிறிஸ்துவின் சிந்தையை நிறைவேற்ற முடியாது.
புது ரசத்தை புது துருத்தியில் வார்த்து வைத்தால் தான் துருத்தியும் ரசமும் பாதுகாப்பாக இருக்கும். புதிய ரசத்தைப் போன்ற புதிய அபிஷேகததை ஏற்றுக்கொண்டு சேமித்து வைக்கக்கூடிய புதிய பாத்திரமாகிய புது சிருஷ்டியாக மாற வேண்டும். நாம் கர்த்தருக்காக பயன்பட வேண்டுமானால் பழைய பாத்திரத்திலிருந்து புது பாத்திரத்திற்கு மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.இதுவரை புதிய பாத்திரத்தில் மறுபாத்திரத்தில் எந்தளவு ஊற்றப்பட்டிருக்கிறோம். சிந்தித்துப் பார்ப்போம். வருகையில் காணப்படுமளவு வார்க்கப் பட்டிருக்கிறோமா? அல்லது புத்தியில்லா கன்னிகைகளைப் போல வருகைக்கு ஆயத்தமாக தான் இருக்கிறோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு, முழு ஆயத்தத்தோடிராமல், அரைகுறையாக வார்க்கப் பட்டிருக்கிறோமா? வருகையில் கைவிடப்படும் நிலையில் இருக்கிறோமா? சிந்திப்போம்.
ஜெபம்:-
தேவனே இரட்சிக்கப்படும் முன்பு, சாவுக்குப் பாத்திரராக இருந்த எங்களை, சத்துருவால் பட்சிக்கப்பட்டு சகலவித துர்குணங்களாலும் நிறைந்தவர்களாக, கர்த்தர் விரும்பாத வெறும் பாத்திரமாகக் காணப்பட்டுக் கொண்டிருந்த எங்களை, வெறியினாலும், சஞ்சலத்தினாலும் நிறைந்த பாழ்க்கடிப்பின் பாத்திரமாக விளங்கிய எங்களை, பாவஞ்செய்து, அநியாயஞ்செய்து, மரணத்தின் கட்டுகளால் கட்டப்பட்டுள்ள பாத்திரமாயிருந்த எங்களை, தேடி வந்து இரட்சித்து, அபிஷேகித்து, உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டீரே! உம்முடைய கிருபைக்கு நன்றி ஐயா!. அநேக சத்தியங்களை அறிந்திருந்தும், நாங்கள் கர்த்தருக்கேற்ற பாத்திரமாக, மறு பாத்திரத்தில் வார்க்கப்படும்படி எங்களை முழுமையாக விட்டுக் கொடுக்காதிருந்த எங்களுடைய பாவங்களை மன்னியும்ஆண்டவரே.
தேவனே! எங்களை உம்முடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறோம். எங்களுக்குள் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இனி நாங்கள், கர்த்தருடைய நாமத்தை அறிவிக்கிற பாத்திரமாக உண்மையாக நடந்து கொள்ள ஒப்புக்கொடுக்கிறோம். கர்த்தருடைய பாத்திரத்தில் பானம் பண்ணும்போது அபாத்திரமாய் பானம் பண்ணாமல், உடைந்த உள்ளத்தோடும் ஒப்புக்கொடுத்தலோடும் ஜாக்கிரதையாக பானம் பண்ணும்படி எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் தேவனுடைய நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக்கப்பட்ட கனத்திற்குரிய பாத்திரங்களாகவும், தேவனுக்கும் ஜனங்களுக்கும் முன்பாக சாட்சியுள்ள பாத்திரமாகவும் மாறும்படி எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுக்குள் மாற்றங்களை உண்டு பண்ணுகிற கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.
3) அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது:
வண்டல்கள், சேற்றுக் குவியல்கள் என்றால் பாவத்தையும், அக்கிரமத்தையும் குறிக்கிறதாக இருக்கிறது. இரட்சிக்கப்பட்ட பின்பு நாளுக்கு நாள் கிறிஸ்துவை தரித்துக் கொள்ளாமல், பழைய சேற்றுக் குவியல்களின் மேலேயே அசையாமல் அனலுமின்றி, குளிருமின்றி இருந்தால், கர்த்தர் நம்மை வாந்திப் பண்ணிப் போடுவார் என்று வேதம் எச்சரிக்கிறது.
தேவபிள்ளைகள் சேற்றுக்குவியலைப் போன்ற பாவ அக்கிரமங்களின் மேலும், பாரம்பரிய சாபங்களின் மேலும், உட்கார்ந்திருக்கும் போது, தேவனைப் பற்றிய அறிவை அடையாமல், தேவனுடைய அசைவாடுதல் இல்லாமல், எவ்வித உணர்வுமின்றி சாவுக்கேதுவான பாத்திரமாக அப்படியே இருப்பார்கள்.ஆனால் தேவனுடைய சத்தியத்தை கேட்பதற்கும், அவருக்கு கீழ்படியும்படிக்கும் ஒப்புக் கொடுக்கும்படி தன்னுடைய மனதை திருப்புகிறவர்களிடையே, பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, அவர்களுக்கு பாவ உணர்வை தந்து பரிசுத்தப்படுத்தி, வாஞ்சையோடு கேட்கிறவர்களை தமது அபிஷேகத்தினால் நிறைந்து, அவர்களுடைய பாரம்பரிய கட்டுகளிலிருந்து விடுதலை தந்து, புதிய சிருஷ்டியாக மாற்றுவார்.அறியாமையினால், சாத்தானின் அசைவுகளினால் முழ்கிப் போக நேரிட்டாலும், தாகத்தோடு தேவனை நோக்கிப் பார்க்கும்போது, ஆவியானவரின் அபிஷேகத்தினால் மூழ்கிடாமல் மேலெழும்பி தன்னை காத்துக் கொள்ளும்படியான கிருபையை தந்தருளுவார்.அசையாமல் வண்டல்களின் மேலிருக்கிற அனுபவம் இன்னும் நம்மிடம் காணப்படுகிறதா? எந்தெந்த எல்லைகளில் எல்லாம் வண்டல்கள் இன்னும் காணப் படுகிறது சிந்திப்போம். வண்டல்களிலிருந்து விடுபட்டு வெளியேற முயற்சிப்போம். கிறிஸ்துவினால் நான் அசைக்கப் படாதிருப்பேன் என்ற அனுபவம் தேவ பிள்ளைகளுக்கு வேண்டுமேயொழிய, வண்டல்களின் மேல் அசையாமலிருப்பேன் என்ற அனுபவத்தில் நிலைத்திருப்பவர்கள் மனந்திரும்ப வேண்டும்.
ஜெபம்:-
கர்த்தாவே உமக்குப் பிரியமில்லாத வண்டல்கள் எங்கள் எல்லைகளில் காணப்படக்கூடாது ஆண்டவரே. அக்கிரமத்தின் வண்டல்கள், மேட்டிமையின் வண்டல்கள், கீழ்ப்படியாமையின் வண்டல்கள், முறுமுறுப்பின் வண்டல்கள், போன்றவைகள் எங்களது எல்லைகளில் காணப்படக் கூடாது என்று ஜெபிக்கிறோம் ஆண்டவரே.எம்மை வண்டல்களாக, கீழே இழுத்து, கிறிஸ்துவுக்காக எழும்பக் கூடாதபடிக்கு அமுக்கி மூழ்கி விடக்கூடிய வல்லமை நிறைந்த துர்சுபாவங்கள் எங்களை விட்டு ஒழிக்கப்பட வேண்டுமே தேவனே!. தெளிந்த நீரோடைப் போன்ற ஆவியானவரின் அசைவாடுதல் எங்கள் மேலும், எங்கள் குடும்பங்கள் மேலும், எங்கள் எல்லைகளிலும் காணப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறோம்.
வண்டல்களை விட்டெழும்பி, ஆவியானவருக்கு இடங்கொடுத்து, படிப்படியாக கணுக்காலளவு அபிஷேகம், முழங்காலளவு அபிஷேகம், இடுப்பளவு அபிஷேகம், மற்றும் நீச்சல் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட நாங்கள் விரும்புகிறோம் ஆண்டவரே. எங்களுக்குள் மாற்றங்களை உண்டு பண்ணும். மாற்றங்களை உண்டு பண்ணுகிற கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.
4) அது சிறையிறுப்புக்குப் போனதில்லை:
சிறையிறுப்பு என்றால் அது நோயாகவோ, கடன் பிரச்சனையாகவோ, அடிமை வாழ்வாகவோ, பில்லி சூனியக்கட்டுகளோ, சாத்தானின் பிரச்சனைகளோ, பஞ்சமோ, பாழ்க்கடிப்போ இப்படி நாம் சமாதானமாக வாழாமல் இருக்கிறதைக் குறிக்கும்.
சிறையிறுப்பு என்று சொன்னாலே தேவபிள்ளைகளாகிய நாம் ஐயோ! எனக்கு வேண்டாம் ஆண்டவரே என்று தான் சொல்லுவோம். எப்பொழுதும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால் ஒரு தேவபிள்ளை பக்குவப்பட வேண்டுமானால் சிறையிறுப்பு என்பது மிகவும் அவசியமாகிறது.
சிறையிறுப்பின் போது தான், கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்க முடிகிறது.
சிறையிறுப்பின் போது தான், மனிதர்களின் உதவி விருதா என்றும், தேவனுடைய ஒத்தாசை மாத்திரமே நம்மை நிரந்தரமாக விடுவிக்கக் கூடும் என்பதும் நிச்சயமாக உணர்த்தப் படுகிறது.
சிறையிறுப்பின் போது தான், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து, பாவங்கள் உணர்த்தப்பட்டு, அதிலிருந்து நிரந்தரமாக மீண்டு வர வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
யோனா மீன் வயிற்றில் மூன்று நாட்கள் சிறையிருந்த போது தான் தன் தவறைஉணர்ந்து பாவ அறிக்கையிட்டு தேவபணியை நிறைவேற்றும்படி தன்னை ஒப்புக்கொடுத்தான்.
யூதர்களுக்கு விரோதமாக செயல்பட்ட சவுல் மூன்று நாட்கள் பார்வையின்றி சிறையிறுப்புக்குள் இருந்த போது தான், தன் தவறுகளை உணர்ந்து, தன்னை நிதானித்தறிந்து, கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். பார்வை கிடைத்தவுடனே சடுதியில் எழும்பி, கர்த்தரே தேவனென்று அறிவித்து தேவனுடைய ரகசியங்களை பிரசங்கிக்கும்படி செயல்பட்டான்.
யோசேப்பும், தாவீதும் தேவனால் அபிஷேகிக்கப் பட்டிருந்தாலும், தன் சகோதரர்களால் பகைக்கப்பட்டு, தங்களது 17வது வயதிலிருந்து 30வது வயதுவரை பலதரப்பட்ட சிறையிறுப்புகளோடே கடந்து சென்றதால் தான் தேவனால் உயர்த்தப் பட்டார்கள்.
ஜெபம்-
தேவனே உம்முடைய சிறையிறுப்புக்கு இடங்கொடுக்காமல், அவைகளைப் பாரமாக எண்ணி உம்மை குறைகூறியிருக்கிற பாவங்களை மன்னித்தருளும் ஆண்டவரே.
சிறையிறுப்புகள் எங்களை உயர்த்த தேவரீர் பயன்படுத்தும் படிக்கட்டுகளாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம் ஆண்டவரே. தேவனே உம்மை அண்டிக் கொண்டு, உம்மால் உயர்த்தப்பட இடங்கொடுக்கிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும்.
சிறையிறுப்பைக் கண்டு அஞ்சாமல், சிறையிறுப்பு எம்மை இன்னும் உம்மிடம் கிட்டிச் சேர்க்க உதவும் ஆவிக்குரிய ஆயுதம் என்பதை உணர்ந்து, அதில் பக்குவப்பட எங்களை ஒப்புக் கொடுக்கிறோம். பக்குவப்படுத்தும் தேவனே. நன்றி ஐயா!.
5) ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது:
ஒரு விதை விதைக்கப்பட்டு, முளைத்து, கனி கொடுக்கும் பொழுது, விதையின் தன்மையோடு தான் இருக்கும். அதின் ருசி மாறுபட வழியில்லை. அதுபோல, ஒரு தாய்
தந்தை எப்படியோ, பிள்ளையும் அப்படியே அவர்களுடைய ருசியோடு, அவர்களுடைய குணங்களோடு தான் இருப்பார்கள்.
உலகத்தின் பார்வையில் குழந்தை வேறுபட்டு பிறந்தால் குடும்பத்தில் சந்தேகம் தான் ஏற்படும். ஆனால் ஆவிக்குரிய பார்வையில் இரட்சிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய பழைய ருசியிலேயே நிலைத்திருக்கக் கூடாது. மறுபடியும் பிறந்தவர்கள் தங்களுடைய எல்லாவற்றிலேயும் வேறுபடாதிருந்தால், எதற்காக இரட்சிக்கப் பட்டார்களோ அதனுடைய பலனை அடைய முடியாது. அவர்களுடைய ருசி கிறிஸ்துவுக்கேற்ற பிரகாரமாக மாற்றப்பட வேண்டும். அப்பொழுது தான் தேவன் ருசிக்கும் விதமாக கனி கொடுக்க முடியும்.
ஒரு இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளை, இரட்சிக்கப்பட்ட பின்பும், முன்பு அவர்களிடம் காணப்பட்ட பழைய ருசியாகிய கசப்பும், புளிப்பும், துவர்ப்புமாக அருவருக்கப் படத்தக்கதுமான ருசிகளாகிய துர்குணங்களில் நிலைத்திருந்தால், கர்த்தர் எதிர்பார்க்கிறகனியை கொடுக்க முடியாது. கர்த்தருக்கேற்ற கனிகளை கொடுக்க வேண்டுமானால், பழைய ருசிகளை உதறித்தள்ளி, உயர்குல திராட்ச செடியாகிய கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.
ஜெபம்-
எங்களிடம் இரட்சிக்கப்பட்டு பல வருடங்கள் ஆன போதிலும் இன்னும் பழைய ருசிகள் பல காணப்படுகிறது என்பதை உணருகிறோம் ஆண்டவரே. பல மாறாத ருசிகளில் இன்னும் நிலைத்திருக்கிறோம். செய்யக்கூடாது, நினைக்கக் கூடாது, விட்டு விட்டோம் என்று தேவனாகிய உமக்கு முன்பாக வாயினாலே அறிக்கை செய்திருந்தும், அவைகளை முற்றிலுமாக வேரோடு பிடுங்காமல் இருக்கிறோம் என்பதை உணருகிறோம் ஆண்டவரே.
இப்பொழுதும், இயேசுகிறிஸ்துவின் ரத்தத்தினால் ஒருவிசை எங்கள் உள்ளும் புறமும் கழுவப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். கர்த்தருக்காக கனி கொடுக்க இயலாதவைகளில் நாங்கள் நிலைத்திராமல், கர்த்தருக்குப் பிரியமானவைகளில் நிலைத்திருக்கும்படி எங்களை உம்மிடம் முழு மனதோடு ஒப்புக்கொடுக்கிறோம். ஆவியானவர் எங்களை நடத்துவீராக.
6) அதின் வாசனை வேறுபடவில்லை:
ஒரு தேவபிள்ளை கிறிஸ்துவின் வாசனையை வீசுபவர்களாக இருக்க வேண்டுமேயொழிய, பாவ வாசனை அடிக்கிறவர்களாக இருக்கக் கூடாது. நம்மிடம் இன்னும் என்னென்ன வாசனைகள் வேறுபடாமல் இருக்கிறது. முன்பு கிழவிப்பேச்சும், கெட்டபேச்சும், வம்பும், குறைகூறுதலும், முறுமுறுக்குதலுமான துர்குணங்களின் வாசனை வீசியிருக்கலாம்.
“இவர்கள் இப்படித்தான். இவர்கள் மாறவே மாட்டார்கள். இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா? இரட்சிக்கப்பட்டு என்ன பிரயோஜனம்?” என்று நம்முடைய பழைய வாசனைகளை நினைவுகூர்ந்து, “இவர்கள் இப்படித்தான்“ என்று மீண்டும் மீண்டும் முத்திரை குத்தும்படியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? சிந்திப்போம்.
ஆனால், சிலகாலமாக இவர்களிடம் மாற்றம் காணப்படுகிறதே, எப்படி இவ்வாறு மாறினார்கள். இவர்களிடம் காணப்பட்ட பழைய சுபாவம் முற்றிலுமாக மாற்றப் பட்டுள்ளதை காணமுடிகிறதே. எவ்வளவு கடினமாக இருந்தவர்கள், இப்பொழுது எப்படி அன்புள்ளவர்களாக, மென்மையானவர்களாக, பொறுமையுள்ளவர்களாக மாறி விட்டார்கள். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லையே என்று ஒவ்வொரு தேவபிள்ளையும் நற்சாட்சி பெற வேண்டும்.
தேவன் நம்மை கடந்து செல்லும்போது, இன்னும் சினிமா சீரியல் தொலைக்காட்சி இவைகளின் வாசனை வீசிக் கொண்டிருக்கிறதா? விபச்சார வேசித்தனத்தின் வாசனை வேறுபடவில்லையா? பீடி சிகரெட் கஞ்சா போதை குடி பழக்கங்களின்வாசனையிலிருந்து விடுபடவில்லையா? இவ்விதமான அசுத்தமானவாசனைகளிலிருந்து விடுபட, வேறுபட, பிரித்தெடுக்கப்பட முயற்சிக்க வேண்டும். துர் வாசனைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டியவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
பிலேயாம் அநீதத்தின் கூலிக்கான வாசனையினின்று விடுபடாததால் தான் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தையைப் பேசினாலும், மறைமுகமாக தந்திரமான காரியங்களை புறஜாதி ராஜாவுக்கு சொல்லிக் கொடுத்தான். அநீதத்தின் வாசனை வேறுபடாதிருந்ததால் தன் ஜீவனையும் இழந்தான்.லோத்தின் மனைவி சோதோம் கொமொரா பட்டணம் அழிக்கப்படும் முன்பு தேவ தூதர்களால் தயவாகவும், அற்புதமாகவும் மீட்கப்பட்டிருந்தாலும், அவள் தன்னிடம் காணப்பட்ட பொருளாசையென்னும் விக்கிரகாராதனையின் வாசனையினின்று விடுபடாமல் இருந்ததால் தான், திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற தேவ எச்சரிப்பையும் மீறி திரும்பிப் பார்த்து உப்புத் தூணாகினாள்.
லோத்தின் மகள்கள் சோதோம் கொமொராவில் காணப்பட்ட விபச்சாரவேசித்தனத்தின் வாசனையிலிருந்து மீட்கப்படாதிருந்ததால் தான், தன் சொந்த தகப்பனிடமே பிள்ளையைப் பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு பிரியமில்லாத மோவாப் மற்றும் அம்மோன் சந்ததியை பெற்றெடுத்தார்கள்.இப்படிப்பட்ட விடுபட முடியாத வாசனை நம்மிடம் காணப்படுகிறதா? பாவத்திலிருந்து விடுபட்டு விட்டோம் என்று நினைத்திருந்தாலும், அதின் வாசனையினின்று விடுபடாமல் இருக்கிறோமா? சிந்திப்போம். தேசத்தில் அப்படிப் பட்டவர்களுக்காக ஜெபிப்போம்.
ஜெபம்-
தேவனே இரட்சிக்கப்படும் முன்பாக கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரண வாசனை வீசிக் கொண்டிருந்த எங்களை இரட்சித்து, இரட்சிக்கப் படுபவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனை வீசும்படியாக மாற்றியிருக்கிறீர் என்பதை விசுவாசிக்கிறோம் ஆண்டவரே.
எங்கள் எல்லைகளில் ஆவியானவரின் அபிஷேக வாசனை வீச வேண்டும் அப்பா. துதியின் சுகந்த வாசனை வெளிப்பட வேண்டும் ஆண்டவரே. ஜெப தூபங்கள் ஏறெடுக்கப்படுகிற வாசனை இடைவிடாமல் எழும்ப வேண்டும் தேவனே. பரிந்து பேசி ஜெபிக்கிற சத்தம் கண்ணீரோடு கூட தேவ சந்நிதியை பலவந்தம் பண்ணுகிற வாசனையாக ஏறெடுக்கப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம் ஆண்டவரே.
தேவனே கர்த்தருக்குப் பயப்படுதல் எங்களுக்கும் உகந்த வாசனையாக இருக்கட்டுமப்பா. எல்லாவற்றிலும், எந்த இடத்திலும் வெற்றி சிறக்கப் பண்ணுகிற கர்த்தரை அறிகிற அறிவின் வாசனை எங்களிலிருந்து வீசட்டும் ஆண்டவரே. ஒரு காய்ந்துபோன மரக்கட்டை தண்ணீரின் வாசனையினால் துளிர்க்கிறது போல, கர்த்தரை அறிகிறஅறிவின் வாசனையினால் எங்களை செழிக்கப் பண்ணி சகலவித அருமையானஆவிக்குரிய கனிகளின் வாசனையை வீசப்பண்ணி, கர்த்தர் நுகருகிற சுகந்த வாசனை வீசுபவர்களாக மாற்றுகிற கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.
கவிழ்த்துப் போட்டு, வெறுமையாக்கி, உடைத்துப் போடாமலிருக்க ஜெபிப்போம்.
எரே48-12 – ”ஆகையால் இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, கவிழ்த்துப் போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப் போடுவார்கள்.”.மேலே சொல்லப்பட்டுள்ள ஆறு மாற்றங்கள் நம்மிடையே காணப்படாத போது,
கர்த்தர் கவிழ்த்துப் போடுகிறவர்களை நம்மிடையே அனுப்பி, நம்முடைய பாத்திரங்களை வெறுமையாக்கி, ஜாடிகளை மீண்டும் பயன்படுத்தாதபடிக்கு உடைத்துப் போடுவேன் என்று சொல்லுகிறார்.
வெறுமனே கவிழ்த்தால், மீண்டும் எழும்பலாம் என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால், உடைத்துப் போட்டால், எழும்ப கூடும் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு தேவபிள்ளைக்கு ஏற்படக்கூடாது என்று ஜெபிப்போம்.
ஜெபம்:-
ஆண்டவரே எங்களுக்குள் மாற்றம் உண்டாக இடங்கொடாமல், தேவகோபத்திற்கு வழிதிறந்து, கவிழ்க்கப்பட்டு, வெறுமையாக்கப்பட்டு, உடைக்கப்படுவதிலிருந்து தப்புவிக்கப்பட எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஏற்றுக்கொள்ளும் தேவனே. எங்கேயும் எப்பொழுதும் உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைப்படட்டும். ஆமென்!.
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி