ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

March 30, 2015

5th Word on the Cross by Jesus - 35th day in the lent

”தாகமாயிருக்கிறேன்”

யோவான் 19:28 – அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம்  நிறைவேறத்தக்கதாக, ”தாகமாயிருக்கிறேன்” என்றார்.

          நமக்காக ஐங்காயம் ஏற்ற இயேசு, தமது சிலுவைபாடுகளின் மத்தியில்  ஐந்தாவது வார்த்தையாக ”தாகமாயிருக்கிறேன்” என்றார். ''தாகம்'' என்ற வார்த்தை நா வறண்ட தாகத்தை குறிக்கலாம். மற்றும் ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஆர்வம், குறிக்கோளை  போன்ற பல வார்த்தைகளில் சொல்லலாம். மேலும் தாகம் என்றால் ஒருவன் தன்னிடம் இல்லாத ஒன்றை அடைவதற்காக அவனுடைய மனம் மற்றும் சரீர கொள்ளுகிற ஏக்கத்தை குறிக்கும். இங்கு நம் இயேசு எதற்காக தாகங்கொண்டார்? என்று சிந்திப்போம்.

  இயேசு தாகமாயிருக்கிறேன் என்று சொன்னதை (1) உலகத்தின் பார்வை மற்றும் (2) ஆவிக்குரிய பார்வை  என்று இரண்டு விதமான கோணங்களில் பார்க்கலாம்.

உலகப் பார்வை –  இயேசு இராபோஜனத்திற்கு பிறகு தொடர்ந்து சிலுவை வரை அவர் எதையும் குடித்ததாக வேதத்தில் காணப்படவில்லை. பொதுவாக அதிகமாக இரத்தம் இழக்கும் போது தாகம் உண்டாகும். அப்படிப்பட்ட தாகத்தை தான் அவர் தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறாரோ என்று பார்த்தால், இல்லை. ஏனெனில், தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றியவரும், ஜீவதண்ணீரின் ஊற்றாக கன்மலையைப் பிளந்து அநேகருடைய தாகத்தை தீர்த்தவராகிய இயேசுகிறிஸ்து, தாகமாயிருக்கிறேன் என்று சொன்னது நா வறண்டு போன தாகத்தினால் அல்ல

ஆவிக்குரிய பார்வை -  "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், ஒருக்காலும் தாகமடையான்" என்று சொன்னவரும், ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றவரும், ”நான் கொடுக்கும் நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றான ஜீவதண்ணீரை குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” என்று சொன்னவர் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னது தன்னுடைய ஆவிக்குரிய ஆத்தும தாகங்களை குறித்த பாரம்.

இயேசுவிடம் காணப்பட்ட உண்மையான தாகங்கள் சிலவற்றை பார்ப்போம்.
  1. இயேசு இந்த உலகம் பிசாசின் படியிலிருந்து மீட்படைய வேண்டுமென்ற மீட்பின் தாகங் கொண்டார் 
  2. பிதாவின் நீதியையும், சித்தத்தையும் பூமியில் நிறைவேற்றும்படி நீதியின் தாகங்கொண்டார்
  3. மனுக்குலத்தை பாவத்தினின்று இரட்சிக்கும்படி இரட்சிப்பின் தாகங் கொண்டார்.
  4. மனுக்குலம் இரட்சிப்படைவதற்கு மீட்பின் விலையாக தம் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தும்படி பாடுகளின் மேல் தாகங் கொண்டார்
  5. பரலோக மகிமையில் தம் பிள்ளைகள் பங்கடைய வேண்டுமென்ற மகிமையின் தாகங் கொண்டார்.
  6.  தேசம் பரிசுத்தமடைய வேண்டுமேயென்ற பரிசுத்தத்தின் தாகங் கொண்டார்
  7. அழிந்துபோகிற ஆத்துமாக்கள் அழியாமையை தரித்துகொள்ள வேண்டுமென்ற ஜீவ தாகங் கொண்டார். 
  8. தேவனுடைய நீதி தன்னிடமிருந்து புறப்பட்டு அநேகருடைய நன்மையாக மாற வேண்டுமென்று நன்மையின் தாகங் கொண்டார்.
  9. தேசத்து ஜனங்கள் தம்மிடத்திலும் பிதாவிடத்திலும் அன்போடிருந்து, பிறரிடத்திலும் அன்பாயிருக்க வேண்டுமென்று அன்பின் தாகங் கொண்டார்

சிலுவையின் மத்தியில் பேசிய இந்த வசனத்தை இரண்டுவிதமாக பிரித்து தியானிக்கலாம்.          
  • அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, 
  • வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, ”தாகமாயிருக்கிறேன்”  என்றார்.
முதலாவது “அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து“

எதன் பின்பு?  இயேசு சிலுவை சுமந்த அந்நேரத்திலும், பரலோகத்தின் படிக்கட்டுகளாக இருக்கிறதும், ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதுமான சில சத்தியங்களை செயல் விளக்கமாக சொல்லிக் கொடுத்தபின்பு “எல்லாம் முடிந்தது என்று அறிந்து தாகமாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று  சொல்லியதின் மூலம், மன்னிப்பின் அவசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்
இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் என்று மனந்திரும்பிய கள்ளனைப் பார்த்து சொன்னதினிமித்தம், மனந்திரும்புதலின் அவசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்
ஸ்திரீயே இதோ உன் மகன் என்றும், யோவானிடம் அதோ உன் தாய் என்றும் சொன்னதினிமித்தம், தாய் தந்தையரை கனப்படுத்தி பாதுகாப்பதின் அவசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறியதின் முலம், பிதாவின் பார்வை ஒரு நிமிடம் கூட நம்மை விட்டு மறைக்கப்படாமலிருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.  இந்த நான்கையும் சொல்லிக்கொடுத்த பிறகு,

(2) வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ”தாகமாயிருக்கிறேன்” என்கிறார்.
    உலகம் தோன்றியது முதல் உண்டான பிதாவின் உக்கிரத்தின் பாத்திரத்தை வாங்கி தம்மேல் ஏற்றுக்கொண்டு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
பிதாவாகிய தேவனுடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்தவர்களாக, தத்தளிக்கச் செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தவர்களாக, கர்த்தருடைய உக்கிரத்தினாலும் தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாக, சிறைபட்டிருக்கிற நம்மை, இரட்சித்து, விடுவித்து பாழ்கடிப்பும் சங்காரமும் பஞ்சமும் பட்டயமும் வரும்போது ஆறுதல் செய்யும் பொருட்டு, கர்த்தராகிய ஆண்டவரும், தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப் போகிறவருமாகிய நம்முடைய இயேசுகிறிஸ்து, தத்தளிப்பின் பாத்திரத்தை நம் கையிலிருந்து நீக்கிப் போட்டு, தேவனுடைய உக்கிரத்தின் பாத்திரத்தின் வண்டல்களை நாம் குடியாதபடிக்கும் அதை தாம் ஏற்றுக்கொண்டு நம்மை விடுவித்திருக்கிறார்.
இதை பற்றி தான் மத்-26-39 - "என் பிதாவே, இந்த பாத்திரம் நான் பானம் பண்ணினாலொழிய, இது என்னை
விட்டு நீங்க கூடாதாகில் உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது" என்றார்.

நாம் தேவனால் இவ்விதம் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை விசுவாசித்தால், இயேசுவின் சிலுவை தாகங்களை தீர்க்கிறவர்களாக இருக்கிறோம்.  அவையாவன.
  1. இயேசு பிதாவோடு உறவாடி ஜெபிப்பதின் மேல் தாகமாயிருந்தார். இயேசு நேரத்தை ஒதுக்கி, நம்மை தனிமைபடுத்திக் கொண்டு பிதாவிடம் உறவாடிக் கொண்டிருந்ததால் தான் தம்முடைய பணியை உத்தமமாக செவ்வனே நிறைவேற்ற முடிந்தது. தம்முடைய பிள்ளைகளும் அப்படியிருக்கும்படி தாகமாயிருக்கிறார்.
  2.  இயேசு நீதியை மார்கவசமாக அணிந்து, நீதியின் மேல் தாகமாயிருந்தார். நாமும் நீதியை செய்து இயேசுவின் தாகத்தை தீர்த்து வைப்போம்.
  3. இயேசுகிறிஸ்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அதிக தாகமுள்ளவராக இருந்தார். நாமும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி இயேசுவின் தாகத்தை தீர்த்து வைப்போம்.
  4. தம்முடையவர்கள் பிதாவோடும் தம்மோடும் நிலைத்திருக்க வேண்டுமென்பதில் தாகமாயிருந்தார். நாமும் பிதாவுக்குள் நிலைத்திருந்து, நற்கிரியைகளை நடப்பித்து, நற்கனிகளை கொடுத்து இயேசுவின் தாகத்தை தீர்த்து வைப்போம்.
  5. இயேசுகிறிஸ்து, சமாதானத்தின் மேல் தாகமாயிருந்தார். நம்மால் கூடுமானவரை எல்லோரிடமும் சமாதானத்துடன் இருந்து இயேசுவின் தாகத்தை தீர்க்கிறவர்களாக இருப்போம். 
  6. இயேசுகிறிஸ்து, தம்முடையவர்களை இரட்சித்து மீட்டெடுக்கும்படி தாகமாயிருந்தார். முடிவுபரியந்தம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து, இரட்சிக்கப் படுகிறவர்களாகவும், அநேகரை இரட்சிப்பிற்குள் நடத்துகிறவர்களாகவும் கிறிஸ்துவின் இரட்சிப்பின் தாகத்தை தீர்க்கிறவர்களாக இருப்போம்.
  7. இயேசுகிறிஸ்து, தம்மை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நித்தியஜீவனை கொடுக்கும்படி தாகமாயிருந்தார்.
  8. இயேசுகிறிஸ்து தம்முடையவர்களை தீமையினின்று காக்கும்படி தாகமாயிருந்தார். எனவே ஜீவனை விரும்பி, பொல்லாப்புக்கு நாவையும், கபடத்துக்கு உதடுகளையும் விலக்கிக்காத்து, நன்மை செய்து, சமாதானத்தை தேடி, அதை பின்தொடர்ந்து இயேசுவின் தாகத்தை தீர்க்கிறவர்களாக இருக்கவேண்டும்
  9. ஒருவராகிலும் கைவிடப்படாமல் தமது வருகையில் சேர்க்கப்பட வேண்டுமென்று தாகமாயிருந்தார்
      இப்படி இயேசுவின் தாகத்திற்கு அளவேயில்லை. தகப்பன் தன்னுடைய நிறைவேறாத ஆசைகளை, பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுவதுபோல, இயேசுகிறிஸ்து, எந்த காரணத்திற்காக இந்த பூமிக்கு வந்தாரோ, எவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மனிதர்களால் தடுக்கப்பட்டாரோ, அந்த தம்முடைய தாகங்களை, அவருடைய பிள்ளைகளாகிய நம்மைக் கொண்டு நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். நம்மை தேடி வந்து இரட்சித்து, தன் ஜீவனையே நமக்காக தத்தம் தந்தவரின் தாகங்களை நாம் தீர்க்கும்படியாக நம்மை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போமா?
   
தாகமாயிருக்கிறேன் என்ற இயேசுவின் தாகம், அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அவரண்டை வந்து சேரும்வரை, அவர் தாகம் தீராது. அவருடைய தாகத்தை தீர்ப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா? இன்று இந்த ஐந்தாவது வார்த்தையை தியானிக்கும் நாமும், இயேசுவைப்போல தேசத்தின் மீட்புக்காக தாகமுற்று, இயேசுவின் மகிமையில் பங்காளிகளாவோம். ஆமென்.

மனப்பாட வசனம் - யோ-4-14 - ”நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே  நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”.

                                                                                            Shared by Sis.Shanthi Ashok, Pondicherry.
                                                                                                                                               3-30-2015


No comments:

Post a Comment