ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2
Showing posts with label tamil-poems. Show all posts
Showing posts with label tamil-poems. Show all posts

October 28, 2014

உம்மை பிரிந்து வாழ முடியாதையா

உம்மை பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)  

1.  வானத்திலோ பாதாளத்திலோ
    எங்கே நான் தங்கினாலும்
    உமது கை என்னை நடத்தும்
    உம் வலக்கரம் என்னை பிடிக்கும்

2.  இருள் என்னை மூடினாலும்
    என்னை சுற்றி வெளிச்சமாயுள்ளீர்
    உமக்கு மறைவான அந்தகாரமேது
    இருளான சூழ்நிலையும் வெளிச்சமாகும்

3.  பிரமிக்கும் அதிசயமாய் உண்டாக்கி
    தாயின் கருவில் என்னை காத்தீர்
    உமது புஸ்தகத்தில் எழுதி வைத்து
    விசித்திர விநோதமாய் உருவாக்கினீர்

4.  மணலைப் பார்க்கிலும் அதிகமான
    ஆலோசனைகளை எனக்குத் தந்தீர்
    அருமையாய் என்னை நடத்துகிறீர்
    என்றும் உம்மண்டை நானிருப்பேன்

5. தேவனே என்னை ஆராய்ந்து
    என் சிந்தனைகளை அறிகின்றீர்
    வேதனை வழிகளை விட்டு விலக்கி
    நித்திய வழியிலே என்னை நடத்தும்.

-சாந்தி அசோக்
                         பாண்டிச்சேரி.


August 5, 2014

வாருமையா போதகரே

மேக மீதினில் உலா வருபவரே!
தூதர்கள் புடைசூழ வருபவரே!
அதி சீக்கிரமாய் வருபவரே!
நடு வானத்தில் வந்து நிற்பவரே!
          வாருமையா நல் போதகரே!
          வந்தெம்மை அழைத்து செல்லுமே!

கண்ணிமைக்கும் நேரத்தில் வருபவரே!
கைகோர்த்து உம்மோடு வந்திடவே!
கவனமெல்லாம் உம்மேல் செலுத்தியே!
காத்திருக்கிறேன் உம் வருகைக்காக!
         சடுதியாய் இங்கு வாருமையா!
         சர்வசிருஷ்டிகரிடம் அழைத்துசெல்லுமே!

மேக ரதத்தை காணச் செய்யுமே!
எக்காள தொனியை கேட்கச் செய்யுமே!
அழைப்பின் குரலை உணரச் செய்யுமே!
மறுரூபமாக்கி அழைத்துச் செல்லுமே!
       மணவாளரே உடன் வாருமையா!
       மணவாட்டியை அழைத்துசெல்லுமே!

                       -சாந்தி அசோக்
                         பாண்டிச்சேரி.

ஆச்சரியமான வழிநடத்துதல் வேண்டுமே

ஆச்சர்யமான உம் வழிநடத்துதல் வேண்டுமே தேவா இந்த
தந்திரமான உலகினை நான் ஜெயித்திட

தேவாசீர்வாதம் என்னில் தங்க வேண்டுமே தேவா இந்த
மாயமான வாழ்வினை வெறுத்து ஒதுக்கிட

பரலோக பொக்கிஷங்களை பெற்றிட வேண்டுமே தேவா இந்த
அழியும் பூவுலகின் ஆஸ்திகளை தள்ளிட

உம்மோடு இன்னும் கிட்டிச்சேர வேண்டுமே தேவா இந்த
இயற்கையின் பேரழிவுகளினின்று தப்பிட

சிருஷ்டி கர்த்தாவின் ஞானம் வேண்டுமே தேவா இந்த
சிருஷ்டிப்புகளின் அறிவை மேற்கொண்டிட

மெய்ஞான கிறிஸ்தருளும் நீதியின்கனிகள் வேண்டுமே தேவா இந்த
கனியற்ற ஆத்துமாக்களின் மனம் திருப்பிட

அதிகாலை உம்மை போற்றி துதிக்க வேண்டுமே தேவா இந்த
நாளின்தேவ ஆலோசனையின்படி நடந்திட

-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி.

July 18, 2014

இரட்சிப்பு தரும்விடுதலைகள்

விடுதலை விடுதலை விடுதலையே!
இரட்சிப்பின்தேவன்தந்த விடுதலையே!
பாவ சாபத்தினின்று பெற்ற விடுதலையே!
பரலோகப்பாதை காட்டிய விடுதலையே!

வீணானதை பின்பற்றுவதிலிருந்து விடுதலையே!
வீணராக்கும்மாயையிலிருந்து விடுதலையே!
வீண்வார்த்தை பேசுவதிலிருந்து விடுதலையே!
விண்ணகத்தந்தை தயவாயளித்த விடுதலையே!

தீயவரோடுள்ள நட்பின்வழியினின்று விடுதலையே!
தீழ்ப்பானதினின்று பிரித்தெடுத்திட்ட விடுதலையே!
தீரா வியாதிகளை விட்டு விலக்கிய விடுதலையே!
தீதணுகாது நன்மையை ருசிக்கசெய்த விடுதலையே!

பரந்தாமனை அறிந்ததினால்அடைந்த விடுதலையே!
பாதையை மாற்றியமைத்த மாசற்ற விடுதலையே!
பாசமான இயேசு அன்போடு கொடுத்த விடுதலையே!
பார்போற்றும்வெற்றி வேந்தனீந்த விடுதலையே!

மதிகேடானதை செய்வதிலிருந்து விடுதலையே!
மாறுபாடான எண்ணங்களிலிருந்து விடுதலையே!
மனதின்வழியில்நடப்பதிலிருந்து விடுதலையே!
மகத்துவமானவர்அளித்த உன்னத விடுதலையே!

முறையற்ற முறுமுறுப்புகளினின்று விடுதலையே!
முறிந்திட செய்யும்கசப்புகளினின்று விடுதலையே!
முற்றுகையிட்ட சாத்தானிடமிருந்து விடுதலையே!
மூன்றாணிகளால்தொங்கியவரீந்த விடுதலையே!

தாறுமாறுகளை துரத்தி விட்டகற்றிய விடுதலையே!
தடம்புரளச்செய்யும்உணர்வினின்று விடுதலையே!
தாயன்போடு விசாரித்து நடத்துகின்ற விடுதலையே!
தரணியை சிருஷ்டித்த தகப்பனளித்த விடுதலையே!

துன்மார்க்கரின்ஆலோசனையினின்று விடுதலையே!
பாவிகளின்வழிகளில்நிற்பதிலிருந்து விடுதலையே!
பரியாசக்காரரோடு உட்காருவதிலிருந்து விடுதலையே!
தூசியைப்போல பறக்கடிப்பதிலிருந்து விடுதலையே!

தியங்குகிற இருதய நினைவிலிருந்து விடுதலையே!
பொய்யை பிணைக்கும்தீமையினின்று விடுதலையே!
துணிகரமான பாவம்செய்வதினின்று விடுதலையே!
தீயவரின்திசைதிருப்பும்வாழ்விலிருந்து விடுதலையே!

விலையின்றி விற்கப்பட்டு பணமின்றி மீட்கப்பட்ட விடுதலையே!
வெற்றி வேந்தன்இயேசுவின்இரத்தத்தால்பெற்ற விடுதலையே!
எவரும்எதிர்நிற்கவும்எதிர்பேசவும்கூடாத விடுதலையே!
இயேசுவின்வருகையில்கோதுமைமணியாக மாற்றிடும்விடுதலையே!
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி

ஜெப ஜீவியம்

ஜெப வீரனாய் என்னை மாற்றிட
வாருமையா போதகரே – எந்நாளும்
ஜெபிக்கும் ஜெபவீரனாக நான் வாழ்ந்திட
அருளுமையா உம்கிருபைகளை!

உலகில் ஜெயம்பெறச் செய்யும் ஜெபஜீவியமே – என்னை
சேனையதிபனின் செயல் வீரனாக்கிடும் ஜெபஜீவியமே!

உன்னத அனுபவம் தந்திடும் ஜெபஜீவியமே – என்னை
உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும் ஜெபஜீவியமே!

வரங்களால் நிறைந்திடச் செய்யும் ஜெபஜீவியமே – என்னை
வற்றாத நீருற்றை காணச்செய்திடும் ஜெபஜீவியமே!

தள்ளாடாமல் பெலப்படுத்தும் ஜெபஜீவியமே – என்னை
தளராமல் முன்னேறச் செய்திடும் ஜெபஜீவியமே!

மரணத்தின் பிடியினின்று காக்கும் ஜெபஜீவியமே – என்னை
மாமன்னரை காணச்செய்திடும் ஜெபஜீவியமே!

பரவசம் அடைந்திடச்செய்யும் ஜெபஜீவியமே - நான்
பரமப்பிதாவை கண்டுகளிக்க வைக்கும் ஜெபஜீவியமே!

- சாந்தி அசோக்
  பாண்டிச்சேரி

நமஸ்காரம்

நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்
தேவாதி தேவனுக்கு நமஸ்காரம்
வானோர் தொழும் நாதனுக்கு நமஸ்காரம்
பரிசுத்தர் உபகாரனுக்கு நமஸ்காரம்

வறண்ட கானகம் போன்ற வாழ்வில்
வற்றாத நீரூற்றைக் காணச் செய்த
வான் புவி தேவனுக்கு நமஸ்காரம்

ஆளுதல் தேறுதலற்ற வாழ்வில்
யாரும் எடுக்க இயலா தேவன்பளித்த
தேற்றரவாளனுக்கு நமஸ்காரம்

கண்ணீரினால் நனைந்த என் படுக்கையை
அபிஷேக மழையினால் நிறையச் செய்த
அபிஷேக நாதருக்கு நமஸ்காரம்

வீண் வார்த்தைகளை அலப்பிய என் நாவை
துதிகள் செலுத்தும் கருவியாக மாற்றிய
திரித்துவ தேவனுக்கு நமஸ்காரம்

உலக சிந்தையில் உழன்ற இருதயத்தை
நற்சிந்தையோடு ஜெபிக்க வைத்த
ஜெகத்தின் ரட்சகனுக்கு நமஸ்காரம்.

- சாந்தி அசோக்
  பாண்டிச்சேரி

இயேசுவின் பொங்கும் அன்பு!

கடலலை போல பொங்கும் அன்பு!
கடலில் மூழ்கும் போது தூக்கிய அன்பு!
செங்கடலை பிளந்து நடத்திய அன்பு!
நேற்றுமின்று மென்றும் மாறாத தேவன்பு!

தாவீதுக்கு ஆசீர்வாதம் தந்த பரிசுத்த அன்பு!
குறைவை நிறைவாக்கும் பரம தேவ அன்பு!
சாலமோனுக்கு ஞானம் தந்த ஞான அன்பு!
சவுலை பவுலாக மாற்றிய முன்குறித்த அன்பு!

அக்கினியில் வேகாமல்தானியேலை காத்த அன்பு!
மரித்த லாசருவை உயிரோடெழுப்பிய அற்புத அன்பு!
ஆகாரின் அழுகுரலை கேட்ட அரவணைக்கும் அன்பு!
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேறுதலின் அன்பு!

யோனாவை மீன் வயிற்றில் சுமந்த தீர்மான அன்பு!
மனதுருகி நினிவேயை மன்னித்த தயவான அன்பு!
எலியாவை சுழல்காற்றில் மறைத்த பரம அன்பு!
எலிசாவுக்கு இரு மடங்கு வல்லமை தந்த அன்பு!

கிதியோனின் ஜெபத்தைக் கேட்ட அதிகார அன்பு!
சூரியன் மறையாமல் நிற்க வைத்த அதிசய அன்பு!
எசேக்கியாவுக்கு பதினைந்து வருடம் கூட்டிதந்த அன்பு!
நாகமானின் குஷ்டம் நீக்கிய குணமாக்கும் அன்பு!

எரிகோவை துதியாலே விழச் செய்த துதியின் அன்பு!
பேதுருவை சிறையினின்று மீட்டெடுத்த மீட்பின் அன்பு!
ஸ்தேவானை விசுவாச வல்லமையால் நிறைத்த அன்பு!
அற்புத அடையாளங்கள் செய்ய வைத்த தேவனின் அன்பு!

-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி

எழும்பிப் பிரகாசி சீயோனே

எழும்பு சீயோனே எழும்பு
உன் தூசியை உதறிவிட்டு எழும்பு
நேசரது வருகையின் காலம் நெருங்குதல்லவோ
வருகைக்கு ஆயத்தப்படு நேச வைராக்கியத்தோடு

இன்னுங் கொஞ்சம் உறங்கலாமென்கிறாயோ சீயோனே
கைகளை முடக்கிக் கொண்டு தூங்குகின்றாயோ
சடுதியில் ஆபத்தும் நெருங்கி கொண்டிருக்குது பார்
தப்புவிப்பாரின்றி பூமியில் புதைந்திடாதே மகனே

தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிடுங் காலமல்லவோ
திடுக்கிடுஞ் செய்திகளும் கேட்கப்படுகின்றதே
சத்துருவின் ஆட்டங்கள் பெருகுகிறதே மகனே
சத்துவங்களும் அசைக்கப்படுகின்றதே

நிர்விசாரங்களினால் நிறைந்திருக்கிறாயே சீயோனே
நிர்பந்தமான மனிதன் நான் என்செய்வேன் என்கிறாயோ
நிதர்சனமான தேவனின் சித்தஞ்செய்திட எழும்பிடு மகனே
நித்தமும் வேதனையில் துடிக்குங்காலம் நெருங்கிடுதே

தேவவார்த்தையென்னும் பட்டயத்தை எடுத்திடு சீயோனே
போராடி ஜெபித்திடும் ஜெபவீரனாய் வீறுகொண்டெழு
அபிஷேகத்தில் திளைத்து சாத்தானை துரத்திடு மகனே
பரிசுத்த தேவனின் வருகைக்கு தேசத்தை ஆயத்தப்படுத்திடு

நிமிஷந்தோறும் நரகத்தை நாடும் மாந்தரை பார் சீயோனே
நித்தமும் அவர்களின் விடுதலைக்காக கதறியழுதிடு
விடுதலை நாயகனாம் இயேசுவின் நாமத்தை உரைத்திடு
விடுவிக்க இயலாதிடத்திற்கு போகிறவர்களை தடுத்திடு

கற்ற வார்த்தைகளால் கருத்தூன்றி ஜெபித்திடு சீயோனே
நேசரால் கேட்கப்படாத ஜெப நேரங்களைத் தவிர்த்திடு
கல்லுஞ் சுவருங்கூட உனக்கெதிராய் சாட்சியிடும் என்பதறிந்திடு
எந்த ஸ்தானத்திலும், இடத்திலும் சாட்சியோடிருக்க ஒப்புக்கொடு

நெகேமியா போல நிமிஷ ஜெபம் செய்திடப்பழகு சீயோனே
தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்திடு
எஸ்தரைப் போல உபவாச ஜெபத்தால் சதிகளை முறியடித்திடு
இயேசுவைப் போல ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்திடு

உனக்கருமையானதை சிங்கக்குட்டிகளுக்கு விடாதே சீயோனே
பால சிங்கங்களுக்கு இரையாகும்படி பலவீனப்படாதே
கழுகுக்கு சமானமாய் உன் வயதை வாலவயதாக்கிடு
ஆதியன்பை விட்டிடாமல் கர்த்தருக்காயெழும்பி பிரகாசித்திடு

உனக்கிருக்கும் பெலத்தோடே கிதியோனாயெழும்பிடு சீயோனே
தேவனுடைய பணிகளை யோசுவாபோல முழுபெலத்தோடு செய்திடு
எதிரியின் பெலத்தை தேவ ஞானத்தால் முறித்து தூள்தூளாக்கிடு
அபிஷேக பெலத்தின் முன்பு நிகரேதும் உண்டோ இப்பாரினில்

தேசத்தையழிக்க வரும் வெட்டுக்கிளிகளை துரத்திடு சீயோனே
வெட்டுக்கிளிகளத்தனையாய் தேவசேனையை பெருக்கிட எழும்பு
சாத்தானின் சேனையை முறியடிக்கும் யுத்தவீரனாய் எழும்பிடு
தேசமெங்கும் ஜெபிக்கும் ஜெபவீரர்களை திரளாய் உருவாக்கிடு

புத்தியில்லா கன்னியைப் போல ஆயத்தமிலாதிருந்திடாதே சீயோனே
சுயநல ஜெபங்களிலேயே அமிழ்ந்திராமல் வீரத்தோடெழும்பிடு
தேசத்திற்காய் அழுது புலம்பி ஜெபித்து ஜெயமெடுத்திடு மகனே
உயர்த்துகிற உன் கரத்தினால் வானயுத்தங்களில் ஜெயம் பெற்றிடு

தேசத்து அதிபதிகளின் ஆதிக்கத்தை விரட்டியடித்திடு சீயோனே
ஒவ்வொரு விக்கிரகத்தின் கோட்டைகளையும் தகர்த்தெறிந்திடு
சாத்தானின் பலிபீடங்களத்தனையையும் நொறுக்கி தூளாக்கிடு
நேசரின் வருகைக்காய் வானம்பூமியை பரிசுத்த ஸ்தலமாக்கிடு

தேசமெங்கும், தெருவெங்கும் ஜெபநடை நடந்திடு சீயோனே
போகுமிடமெங்கும் தீழ்ப்பானதிலிருந்து நன்மையை பிரித்தெடு
பலவித மாந்தர்களிடமும் பக்தி வைராக்கியத்தை உருவாக்கிடு
பார்போற்றும் தேவனின் பிள்ளைகளாக்கி நரகத்திற்கு விலக்கிடு

இரத்தப்பழிகளை விலக்கிடும் ஜெபத்தை ஏறெடு சீயோனே
இரத்தப் பழிகளால் நிறைந்திருக்கும் பூமியை பரிசுத்தப்படுத்திடு
கத்தியின்றி இரத்தமின்றி நேசரன்பினால் பூமியை சுதந்தர்த்திடு
உனக்காய் இரத்தம் சிந்தினவரின் வருகையை எதிர்நோக்கிடு

              ஜெயமே ஜெயமே ஜெயம் உனக்கே!
              ஜெயமே ஜெயமே ஜெயம் நமக்கே!
              ஜெயமே ஜெயமே ஜெயம் நம் தேவனுக்கே!

                                                                                 
 - சாந்தி அசோக்
   பாண்டிச்சேரி.

July 12, 2014

பரிசுத்தமாக்கப் படனுமே

உம்மைக் குத்தினப்பாவிகளில்நானும்ஒருவனல்லவா!
மன்னிக்க இயலாத குற்றங்களை செய்த பாவியல்லவா!
பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொன்னீரே!
பாவியாகிய என்னையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்!

                                              ஏனெனில்

இரட்சண்யமாம் தலைச்சீராவை அணியாத என் தலையும்
தேவ அபிஷேகத்தை தரித்துக் கொள்ளாத என் தலைமுடியும்
கர்த்தருக்குப் பரிசுத்தம் என்றெழுதப்படாத என் நெற்றியும்
இச்சையானவைகளை ஆவலுடன் பார்க்கும் என் கண்களும்

விழித்திருந்து பாரத்தோடு ஜெபிக்கத் தவறிய என் இமைகளும்
தூஷண வார்த்தைகளை விருப்பமுடன் பேசும் என் வாயும்
சுகந்த வாசனையான துதியை ஏறெடுக்க தவறும் என் உதடும்
தீமையான வார்த்தைகளை யோசிக்காமல் கக்கும் என் நாவும்

தேவன் பிரியப்படாததை இச்சித்து கேட்கும் என் செவிகளும்
வசனத்தை கேட்காமல் செவித்திணவுள்ள என் செவிப்பாறையும்
எரிகிற அக்கினி வார்த்தையை வைத்திராத என் எலும்பும்
நீதியென்னும் மார்கவசத்தை அணிந்திராத என் மார்பும்

துன்மார்க்கமான பொய்களை பிணைக்கும் என் மனதும்
வசனமென்னும் பட்டயத்தை வைத்திராத என் இருதயமும்
பொல்லாங்கை இடைவிடாமல் யோசிக்கும் என் சிந்தையும்
சத்தியத்தை இடைக் கச்சையாக தரித்திராத என் இடுப்பும்

சுயநீதியை விரைந்து நடப்பிக்கத் துணியும் என் கரங்களும்
விசுவாசத்தை கேடகமாகப் பிடித்திராத என் கைவிரல்களும்
அநியாயத்துக்கு கீழ்படிய விரைந்தோடும் என் கால்களும்
ஆயத்தமாம் பாதரட்சையை அணிந்திராத என் பாதங்களும்

      உம் கிருபையினாலும் இரக்கத்தாலும்

சிலுவையிலறையப் பட்டு பரிசுத்தமாக்கப்பட வேண்டுமே!
இயேசுவே உம் திரு இரத்தத்தால் கழுவப்பட வேண்டுமே!
மாசற்றவர்களாக உம் வருகையில் காணப்பட வேண்டுமே!
நன்றி நன்றி நன்றி நாதா! நன்றி என் இயேசு நாதா!
                            ஆமென்!

 - சாந்தி அசோக்
    பாண்டிச்சேரி.